அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, December 09, 2006

சொல்லாத நிறத்தில் ஒரு மழை...

கருப்பு சட்டமிட்ட ஜன்னலுக்கு வெளியே
நான் வானம் பார்த்து கொண்டு இருந்தேன்

எல்லாரும் சொல்வது போல அது நீல நிறமாக இல்லை
அதன் நிறம் எனக்கு நினைவில்லாத ஒரு நிறமாகவே இருந்தது

புன்னகைகளின் கல்லறைகளுக்கு மத்தியில் நான் காத்திருந்த நேரங்களில்
வானம் இந்த நிறத்தில் இருப்பதை கவனித்து இருக்கிறேன்...

மேகங்கள் அற்ற வெறுமையான வானத்தில் சில நட்சத்திரங்கள் இருந்தன
அவை பற்றி எரிந்து கொண்டு இருக்கும் தீக்குச்சியை போல இருந்ததாக நினைவு..

தனியாக நாம் சந்திக்கும் இடம் ஒன்று உண்டல்லவா
அங்கே நான் காத்து கொண்டு இருப்பேன்..

நீ வரும்போதெல்லாம் வானத்தின் நிறத்திலேயே உடையணிந்து வருவாய்
அது உன் உடை நிறத்தை போல மாற்றம் கொண்டதாகவே இருந்தாக சொல்வாய்

பின்னர் பிரிந்து இருந்த ஒரு தருணத்தின் உரையாடலின் போது
நாம் வானம் பற்றியும் நிறம் பற்றியும் நிறைய பேசினோம்...
நிறம் என்று ஏதுமில்லை என்றும் அது ஒரு அடையாளம் என்றும் பேசினோம்...

நான் அடையாளம் கண்டு கொண்ட நிறங்களில் வானம் இருந்த போதெல்லாம்
கருப்பு சட்டமிட்ட சன்னல்களுக்கு வெளியே மழை இருந்தது...

Wednesday, August 16, 2006

நினைவுகள் சேமிக்கும் மரங்கள்

வெயில் நிறைந்து கிடைக்கும்
வேப்ப மரங்களில் நிழல்களுக்கு வெளியே
பெறும்பாலான மதிய நேரங்கள்
கொஞ்சம் சோம்பலில்தான் கழிகின்றன

நாங்கள் ஏதாவது மனனம் செய்து கொண்டிருப்போம்
சிலர் வேப்பம்பழங்களை சேமித்து கொண்டு இருப்பார்கள்
மாசிலாமணி வாத்தியாரின் மெல்லிய குரட்டை சத்தம்
சாலையில் செல்லும் பேருந்தின் சத்தத்தில் கொஞ்சம் கலையும்

நிறைய நினைவுகளை அந்த வேப்பமரம் சேமித்து வைத்திருக்கலாம்
சில சிறுமிகள் பெண்களானது முதல்
சில நண்பர்கள் விலகி நின்ற வரை... எல்லாம் நினைவுகளாக
பெயர் மறந்து போன ஒரு வாத்தியாரின் மரணம் உட்பட

மரணங்கள் சூழ்ந்த நிலையில்

முதன் முறை என் மரணம் உன்னால்தான் நிகழ்ந்தது
அது ஒரு புறக்கணிப்பின் விளைவாக

நம்மை நாம் தொடர்ந்து இருக்க
காரணங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை - எனினும்
நம் மரணம் நம் வேட்கையாக இருந்தது

மரணங்கள் சூழ்ந்த நிலையில்
இறுதியாக நாம் பிரிந்து செல்ல தயாரானபோது
பகிர்ந்து கொண்ட முத்தங்களின் ஈரத்தில்
நம் மரணம் காத்திருந்தது

இருப்பினும் இன்னும் எல்லா திசையிலும்
மரணங்கள் காத்திருக்கின்றன
அவை சில நேரங்களில் காதலின் புறக்கணிப்புகளாக
உருவகம் செய்யபடுகின்றன - சில நேரங்களில்
பிரிவுகளின் சுவடுகளாக

சொல்லாமல் தொட்டு செல்லும்...

நாம் நட்போடுதான் இருந்தோம்
மஞ்சள் தடவபட்ட உன் அழைப்பிதழை பார்க்கும்வரைக்கும்

பின்னிரவு வரைக்கும் நாம் பேசி கொண்டிருந்த
உன் வீட்டு மாடியின் தனிமையில்
அர்த்தம் சொல்ல முடியாத மவுனங்களை
மட்டும் கொண்டு... மீண்டும் சந்தித்து கலைகிறோம்

என் படுக்கை அறையில் நீ தொலைத்திருந்த சில
கைகுட்டைகளையும், சில புத்தகங்களையும்
நானே வைத்து கொள்ள போகிறேன்...
என் புத்தகங்களும், ஒரு கம்பளிசட்டையும்
உன்னிடம் மறந்து இருப்பதை போல

நமக்குள் பேசிய எல்லா வார்த்தைகளின் மிச்சங்களையும்
என் கவிதை புத்தகங்கள் கொண்டிருக்கிறது
சொல்லாமல் விட்டு போன காதலையும் சேர்த்து
சில பக்கங்கள் வெறுமையாக இருக்கின்றன

Sunday, July 30, 2006

ஒரு பிரிவின் மிச்சங்கள்…

பிரிவின் மிச்சங்கள்
பெரும்பாலும் சுமைகளாகின்றன
அழிந்த கோலங்களின் நிறங்களில்…
எறும்புகள் நிறைந்திருக்கின்றன..
சில வண்ணத்துபூச்சிகளின் மரணத்தில்
எல்லா வண்ணங்களும் மறந்து போவதை போல…
நிலவும் நானும் ஒற்றைவானமும்
தனிந்திருந்ததை போலவே… நீயும் இருந்திருப்பாய்..
இரவின் தனித்திருந்த தருணங்களில்
ஸ்பரிசங்களின் மிச்சங்களை கொண்டு…
என்னில் புதைந்திருக்கும் நினைவுகளின் மிச்சங்களை
துடைத்து கொள்கிறேன்…
அவை விட்டு சென்ற தடங்களில் எல்லாம்
ஏதோ வகையில் உன் பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது…
காலி குடுவைகளில் இருந்த தண்ணீரின் நினைவுகளை போல..
நம் பிரிவின் மிச்சங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன…
போர்வைகளின் உன் வாசத்தை சுமந்து கொண்டு…
என் காலங்கள் எல்லாம் விழித்து இருக்கிறன…
தனித்த புல்லாங்குழல் இசையில்…
மெல்லிய பனியில் மலர்ந்து நிற்கும் சில மலர்களை..
உனக்காக சேமிக்கின்றேன்…
நினைவுகளை போலவே…

சுய ரகசியங்கள்

சில ரகசியங்கள் இன்னும்
சொல்லபடாமல் இருக்கின்றன..
கறுத்த சுய ரகசியங்களாக
அவை புதைக்க படுகின்றன..

மனதில் ஆழத்தில் வெளிப்படும்
நிறக்கலவைகளாக
சிலரிடம் பகிர்ந்து கொள்ளபடுவதுண்டு
அவற்றின் நிறங்கள் மாறியுள்ளன
என்ற ரகசியம் மறுபடியும் புதைகிறது

நிறங்கள் இல்லாத
ரகசியங்கள் சில இரவுகளில்
வெளிப்படுகின்றன…
இரவுகளின் நிறங்களை சுமந்து கொண்டு

புகைபடிந்த தண்டாவாள செடிகளை போல
ரகசியங்கள் அவற்றின்
நிறங்களை மறந்து
மேலும் ஆழ புதைகின்றன…

பிரிதொருநாளின் இலையுதிர் காலத்தில்…

இன்னும் குளிரென சொல்வாய்
அது இலையுதிர் காலம் என தெரிந்தும்…
என் நெருக்கத்தில் நீயும்…உன் பார்வைகளின்
ஸ்பரிசங்களில் நானும் …
வசந்த காலம் தொடங்க இன்னும்
சில மாதங்கள் இருக்கின்றன…
குளிர்கால காற்றில் …மரங்கள் உதிர்த்த இலைகளை
மிதித்து நடந்து கொண்டு இருக்கின்றோம்…
மலர்தலுக்கு தயாராகும் பூக்களின் தோட்டங்களை
காற்று வருடி கொண்டு இருக்கின்றது…
என் விரல்களுக்குள் உன் விரல்களை நுழைத்து நீ நெருக்கி கொள்வதுண்டு.. பெரும்பாலும் நாம் நடக்கும் தருணங்களில்
தேநீர் கோப்பைகளின் ஓரங்களில் நம் இருவரது உதடுகளின்
தடமும் பதிந்து இருக்கின்றன…
மணிக்கணக்கில் பேசியும் தீராது போகின்றன
மவுனமான பார்வைகள்…
வார்த்தைகளை தேடி தேடி … பார்வைகளாலேயே
சொல்லி கொள்கிறோம்.
கோடையும் குளிரும் வசந்தமும்…
மற்ற கதைகளை கண்டு இருக்கின்றன…மற்றபடி
பொதுவில் எல்லா இலையுதிர் காலங்களும்…
இதுபோலவே கழிகின்றன…

அணில்கள் புணரும் காலம்…

நாம் பிணங்கியிருந்தோம்…
அது அணில்கள் புணரும் காலம்…
சிறிய கருத்து கூறுகளாக…
தொடங்கிய விவாதங்களின் நுனி வேர்
நம் மண்ணில் வெட்டுபடும் தருணங்களில்
மெல்ல உயிர் கசியும் இரவுகளின் கருணைகளை தாண்டி…
நாம் பிணங்கியிருந்த காலம் அது…
பின்னர் ஒரு முறை புன்னகைத்த நினைவு இருக்கிறது…
அதுவும் கனவு போலவே…
மவுனமாய் பிரிந்திருந்தோம்…
எல்லா நினைவுகளின் இறுதியுலும்
வெட்டுபட்ட நுனிவேர்களின் ஈரம் இருந்தது…
உணர்தலை நினைவுறுத்தும் சில புன்னகைகள்
தேவைபட்டு இருந்தன..
நம் இருவரின் வலைகளை கொஞ்சமாய் தளர்த்தி கொண்டோம்…
பின்னர் நாம் புணர்ந்திருந்திருந்தோம்
ஒரு பனி வேளையில்…
அதுவும் அணில்கள் புணரும் காலமாகவே இருந்தது…

சில பனிக்கால பயணங்கள்…

இந்த பயணம் முழுவதும் நீ
என்னுடன் இருந்தாய்
நாம் ரசித்த பாடல்களாய்,
நீ அணிந்திருந்த உடையாய்…

நாம் நெருங்கியிருந்த புல்வெளிகளை இன்றும் பார்த்தேன்...
அவை மேலும் பசுமையாக..
நம்மை போலவே இன்னும் துணைகளோடு…
அவர்களின் நினைவுகளுக்காக…

உன் நினைவுகளில் இருந்து அழிந்திருக்க முடியாது
நாம் நடந்து போன ஏரிக்கரையின் சாலைகள்
சில மலை பாறைகளில் நாம் இளைபாறி இருந்தோம்
நம் பெயர் பொறிந்த மரங்களை
இன்னும் பார்க்கிறேன்…

அடையாள குழப்பங்கள் தீரவில்லை…
எல்லா பூக்களும் ஒன்று போலவே…
சில பெயர் தெரியாத பூக்களுக்கு…
நான் வைத்ததெல்லாம் உன் பெயர் மட்டுமே…

இயற்கையின் பனி பொழிவில்…
இடம்வலமாய் அலையும் வெற்று சாலைகளில்..
நம் பெயர் கொண்ட வேதங்களோடு
காதல் கொண்டிருந்தோம்…

என் கவிதைகளின் வார்த்தைகளோடு
உன்னை ஒப்பிட்டு கொள்வாய்…
சில கவிதைகள் உன்னை சொல்லும்…
சில கவிதைகள் உன்னில் என்னை சொல்லும்…

என் ஓவியங்களின் நிறங்களில்
உன் நினைவுகளை பதித்து இருக்கிறேன்…
சில நிறமில்லாத இடங்களை நிறப்புகின்றன
உன் விரல்களின் ரேகைகள்…

மலை சரிவுகளில் புதைந்து கொண்டு இருக்கிறது
என் நினைவுகளை போலவே
வானமும் .. கொஞ்சம் சூரிய வெளிச்சமும்…

நகரம்…

எல்லாரும் ஓடுகிறார்கள்
பேருந்துகள் நிறம்பி வழிகின்றன
குழந்தைகளின்
கண்களின் வடியும் கண்ணீர் கோடுகளை
துடைக்க யார்க்கும் மனமில்லை

இளங்காலை காமத்தின் சுகம் தெரியாத
சம்சாரிகளின் சத்தத்தில்
கழிவறையின் கதவுகள் அறைந்து சாத்தபடும்
சத்தங்கள் புதைகின்றன

கண்களின் மின்னி கொண்டு இருக்கிறது
அச்சடிக்கபட்ட காகிதங்களின் எண்கள்
எச்சில் வடியும் சிலைகளாக
அகிம்சையும் சுதந்திரமும்…

வீதிகளில் நிறம்பி வழிகிறது
இயலாமையும் ஆற்றாமையும்…
நெருங்கி நிற்க்கும் எவர் கண்ணிலும் இல்லை
நெருக்கத்தின் உயிர்ப்பு…

சிதைந்த உறவுகளை புறங்கையால் துடைத்தபடி
வாகங்களில் விரையும் அடிமை சமுதாயம்
கிழிந்து போன வானத்தின் சில துளி மழையும்
மண்ணில் இறங்க – ரசிக்க ஆளில்லை.

நாய்கள் குரைத்து கொண்டிருக்கும் அகாலத்தில்
சிட்டு குருவிகளின் மரணம்…
யாரிடமும் புன்னகையை எதிர்பார்க்காத
பட்டாம்பூச்சிகளின் கல்லறைகளுக்கு அருகில்

மன நோயாளியின் அர்த்தமற்ற ஓலம் போல
மூளைக்குள் வெடிக்கும் நிற துணுக்குகள்..
கறையான்கள் அழிக்கும் நாகரீகத்தின் துணைவேர்கள்..
இயங்கி கொண்டு இருக்கிறது …நகரம்.

மனசு…

இன்று கொஞ்சம்
இதமாய் இருக்கிறது

நீ இருக்கும் திசையில்
இருந்து வீசும் தென்றல்…

கொஞ்சம் உன்
வாசத்தையும் கொண்டு…

Sunday, June 18, 2006

பேசாமல் இருக்கும் தருணங்களை பற்றி...

சில நேரங்களில் நாம் பேசி கொள்வதில்லை..
பேச ஒன்றும் இருப்பதாக உணரவும் இல்லை..
பேச்சில் தொலைந்த தருணங்களை பற்றி
மவுனங்களில்தான் ஜீரணிக்க முடிகிறது...

உனக்கும் நினைவிருக்கும்..
அலுவகத்தின் தின பேரங்களிடையே
கண்களால் பேசி கொண்டிருப்போம்...
சில நேரம் உன் விரல்களை என் விரல்களுக்குள்
புதைத்து கொண்டு இருப்பாய்..

ஒரு மழைக்கால மாலையில் நாம் சேர்ந்து
வீடு திரும்பி கொண்டு இருந்தோம்..
என் கைகளுக்குள் நீ இருந்தாய் அப்போது...
மழையின் இருட்டு துளிகள் அடங்கும்போது
நீ என்னை முத்தமிட்டாய்..

ரயில் நிலையத்தின் யாருமில்லாத நடைபாதைகள்
நம்மை பற்றி நிறைய பேசியிருக்கும்..
காற்றில் பறந்து போன உன் கைகுட்டையில்
இன்னும் மிச்சமிருக்கும் என்
உதடுகள் துடைக்கபட்ட ஈரம்..

என் கவிதை புத்தங்களில்
ஒளித்து வைக்கபட்ட மயில் இறகுகள்..
அவற்றின் நிறங்களில் ஒளிர்கின்றன
உன் பேச்சும் சிரிப்பும்...

நம் உடைகளில் சில நம்மிடம் இருக்கின்றன...
என் வாசத்தையும் உன் வாசத்தையும் சுமந்து கொண்டு..
சிலுவைகளுக்கு கீழே பூத்திருக்கும் பூக்கள்
வசந்த காலங்களில் மட்டும் பூப்பதில்லை..
இன்னும் சொன்னால் .. பூக்களின் காலம் வசந்தம் மட்டும் இல்லை.

அறிவிக்கபடாத பிரிவு ஒன்று
நம் காலங்களை பிணைத்திருக்கிறது
நாம் பேசி கொள்ளாத தருணங்களின் மட்டுமே
நம் அருகாமையை உணர்கிறோம்..

பின்னிரவுகளின் தூக்கமில்லாத தருணங்களை
நனைத்திருக்கின்றன..நாம் இணைந்திருந்த
தருணங்களின் நினைவுகள்..

காமம் என்பது...

நினைவிருக்கிறதா உனக்கு..
நம் பழைய சந்திப்பும் இது போலத்தான் இருந்தது..

புள்ளிகளுக்கு கட்டுபடாத
குழந்தைகளில் கோலம் போல
சிதறும் வண்ணங்களில் வாழ்ந்திருந்த தருணங்கள் அவை

சேர்ந்திருந்த நேரங்களை விட
சேர்ந்து பிரிந்து இருந்த நேரங்கள் அதிகம்..
உன் பின் கழுத்தின் கூந்தல் வாசம்
என் நுரையீரல்களின் சுவற்றில்
குழந்தை கிறுக்கல்களாக..

காமம் கொள்ளாத காதல் கொண்டதாய்
நினைவில்லை..எனக்கு..
உன் செழுமைகளில் முகம் புதைத்து
ஓய்ந்திருந்த போது
காதலும் கொஞ்சம் துளிர்விட்டு இருக்கலாம்..

நான் கிடந்திருந்த நேரங்களில்
தலை கலைத்து, வேகம் சொல்லி..
கூட நின்று, கூடி நின்று...மின்னும் வாள் கையில் வந்த போது...
உன் மேல் வந்து காமம் மட்டும் அல்ல.. வேறு ஏதோ ஒன்றும் கூட
அதைத்தான் நீ காதல் என்று சொல்வாயோ..

காமம் என்பது கூடி பிரிதல் இல்லை..
காமம் என்பது கூடி நிற்பது..
உணர்வுகளை வடிக்க..வளைவுகளில் வழியும்..
நட்பும் சொல்லும்,உறவும் சொல்லும்..
கர்வம் அழிக்கும்.. காதல் மெல்ல சுரக்கும்..

சுவையும் மணமும்
வியர்வையும் வேகமும்..காமம் என்று சொன்னான்
ஒரு கரைகண்ட துறவி
புணர்ச்சி விதும்பலும், புலவி நுணுக்கமும்
ஊடலுவகையும் மேலும் கொண்டது என்றான்
வான் புகழ் கொண்டவன்..

உன் விரல்களை கொண்டு வரைந்த ஓவியங்கள்
என் உடல் முழுவதும் நிறைந்து இருக்கின்றன...
வண்ணங்களில் விளையாடிய குழந்தை போல
கலைந்து உறங்குகிறாய் நீ..

மெல்லிய இசையில் நிலவும் பூக்களும் கொண்ட
காதலின் வார்த்தைகள் மெல்ல கரைந்து
புன்சிரிப்புகளில் வழியும்
மலையோரத்தில் பூக்கும் பெயர்தெரியாத பூக்களின்
வாசம் போல - உணர்தலில் மேலோங்கும் காமமும் காதலும்...

எல்லாமுமாய் பூக்கும் மலர்கள்..

வெகுநாள் கழித்து மீண்டும் சந்தித்தோம்
பழகாத நண்பர்களை போல..
இலைகள் இல்லாத மரங்கள் சூழ்ந்த
சோலை என்று சொல்லபடும் இடத்தில்..

குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்கிறார்கள்...
காய்ந்த மலர்களின் மகரந்தகளை கொண்டு..
நாம் அமர்ந்திருந்த இருக்கைகளின் கீழே
கொஞ்சம் மஞ்சள் பூக்களோடு
சில எறும்புகளும்..

என் விரல்களில் உன் விரல்களோடு
பிண்ணி இருக்கின்றன..
விடுவித்து கொள்ள மனமின்றி மட்டுமல்ல
விட்டுவிடுவாயோ என்ற சஞ்சலமும்தான்..

மெல்லிய இருட்டு கவிழும் வரைக்கும்
காத்திருந்து பின் சாலை நோக்கி நடக்கிறோம்..
நெருங்கிய நண்பர்களை போல...

உன் வியர்வை இதழ்களை
முத்தமிடுகிறேன்..
என் கைகள் உணர்கின்றன
விம்மலை உன் அழுத்தத்தில்...

சாலையின் வெப்பம்
சாயந்திர மழையில் மெல்ல கரையும்...
மனதில் ஓரம்.. நம் வெப்பம் கரைந்த
இரவுகளை கண்ணில் புதைத்தபடி...
விரல்களை விடுவிக்கிறோம்...

நீண்டு கிடக்கிறது சாலை...
இன்னும் மழை வரவில்லை...
குழந்தைகள போய்விட்டார்கள்..
மகரந்தம் சோலையின் தரையெல்லாம்
சிந்திகிடக்கிறது,,
எறும்புகள் நிறைந்து விட்டன...

Sunday, March 26, 2006

இன்னும் என்னை எப்போதாவது...

உனக்கும் எனக்கும் என்ன உறவு...
நானும் நீயும் யார்...
நீ என்னில் நிறைந்திருக்கிறாய்... நான் உன்னிலும்
எதுவும் இல்லாமல் நீ...எல்லாமுமாய் நீ...
முதன்முறையாக நம்மை நாமாய் உணர்கிறோம்...

உன் செழுமைகளின் அழுத்தம் என் புறங்கைகளில்
என் விரல்கள் உன்மேல் படராமல் இருக்கின்றன...முதன் முறையாக
ஆண்மையின் உயிர்பை உணர்கிறேன்...
கண்களால் நம் நிலையை ஒருவருக்கொருவர் உணர்த்துகிறோம்...
நெருங்கி அமர்கிறாய்...மெல்ல எனக்குள் குழைந்து கொள்கிறாய்...

வாலை குழைத்து நிமிர்ந்து நிற்க்கும் காம நாகம்
மெல்ல மெல்ல தலையில் தட்ட
கொஞ்சமாய் புரண்டு படுக்கிறது...
அதன் மூச்சுக்காற்றின் வெப்பம்
கழுத்தோர வேர்வை பாம்புகளாய்...

என் கைகளுக்கு உன் விரல்களை புதைத்து கொள்கிறாய்
உன் உதடுகளின் துடிப்பை என் மார்ப்பில் உணர்கிறேன்
இதயங்களின் துடிப்பு மெல்ல தாளமாகி நம் வெளியை நிறைக்கிறது
உன் உதடுகளின் அரும்பிய வேர்வைதுளி என்னால் சுவைக்கபடுகிறது...

நீ அறியாத நானும், நான் அறியாத நீயும்
நம் அறிமுகம் ஒரு படலம் போல நம் நட்பின் மேல் நீர்த்து இருக்கிறது...
ஆழமான நீர் நிலையின் ரகசியங்கள் போல
இன்னும் சொல்லாத விஷயங்கள் ஆயிரம்..
அவற்றுள் நாம் பற்றிய நம் கருத்துகளும் உண்டு

உன் வார்த்தைகள் வெளிப்படும் கணங்களில் எல்லாம்
என் காத்திருப்பின் உச்சம் கண்களில் தெரிப்பதை மறைக்கிறேன்...
இந்த வார்த்தையும் நம் காதலை சொல்லவில்லை என்பது
தெரிந்தும் பொய்யாய் ஆமோதிக்கிறேன்...
காத்திருத்தலின் ஆழம் நீள்கிறது...

நாம் நடந்து சென்ற சாலைகளின் பூக்கள்
நம் வரவை இன்றும் எதிர்பார்கின்றன.
நான் உன் கழுத்தில் வரைந்த கோலங்களின் போது...
நீ சிலிர்த்த ஈரங்களில் வளர்ந்த பூக்கள் அவை...
உன் மடியில் நாம் உணர்ந்த மென்மையை
அவை பழித்து காட்டுகின்றன..

உன் காதலை சொல்லிவிட்டாய்...
ஆணின் திமிர் உடனே ஒத்து கொள்ள தவிர்க்கிறது...
என் கண்களின் அர்த்தம் தெரிந்தவள் நீ
என் பதில் முன்னமே தெரிந்தவள் நீ...
நீ சொல்வது சம்மதமல்ல... ஆமோதிப்பு...
என் பதிலை தவிர்க்கிறாய்... என்
கண்களில் வழியும் அர்த்ததை ரசிக்கிறாய்...
உனக்குள் இருக்கும் உயிர் மிருகம்
தன் கால்களை உதைத்து கொண்டு என்
கண்களுக்குள் பார்க்கிறது - நான் மெல்ல சிரிக்கிறேன்...
அது ஒரு கட்டவிழ்தலின் மொழி

உன் காதோர பூக்களிலும், சுருண்ட கேசத்திலும்
என் மனதை கட்டி வைத்துள்ளாய்...உன்
விரல்கள் பற்றி நடக்க
என் திமிர் அடக்கி வைக்க...
என்னை பழக்குகிறாய்...
உன் நோக்கம் அறிந்தோ...உன்னை அறிந்தோ...
உடன்படுகிறேன்... முழுமையாக..

இரவு பேருந்தின் அடுத்தடுத்த இருக்கைகளில்
நாம் சால்வைகளில் அமிழ்ந்து இருந்தோம்...
ரகசியமான தீண்டல்கள் நம்மை உயிர்பித்து கொண்டு இருந்தன...
உன் பித்து என்னிலும் என் பித்து உன்னிலும் இருந்த காலங்கள் அவை...
நம் முத்தங்களில் அடையாளங்களாக
உன் விரல்கள் என்னில் கொண்ட தீற்றல்கள்
நினைத்திருக்கவில்லை நாம்...
ஒரு மழைக்காலத்தின் பின்னிரவில் சொல்லிகொள்ளாமல் பிரிவோம் என்று...

வசந்தகால மரங்களின் பூக்கள் இன்னும் நம்
உணர்வுகளை பூக்கின்றன..
குளிர்கால காமம்
கடந்தும் வசந்தகாலம் பூக்கும் காதல் போல...
நம் போர்வைக்குள் விதைத்து கொள்கிறோம்
காதலையும் சேர்த்து

என் அனுமதியை கண்களால் எட்டி எறிந்துவிட்டு
என்மேல் படர்கிறாய், உன் வேகம் குழந்தையின் பிடிவாதம் போல
என் காதுகளுக்குள் உன் வார்த்தைகள் சுழல்கின்றன
அவை பெரும்பாலும் புரிவதில்லை...தேவையில்லை
உன் செயல்கள் புரியவைக்கின்றன...
மென்மை மட்டும் காதல் என்று
யார் சொன்னது...
உன் முரட்டுத்தனத்தில் உணர்கிறேன்...
பெண்ணுக்கும் மீசை முளைக்கும் என்று...

கண்ணுக்குள் சூரியன் நுழையும் ...
விழிக்கிறேன்...கைகள் உன்னை தேடுகின்றன...
நீ தென்படுகிறாய்...குளித்திருக்கிறாய்...
தண்ணீர் தெளித்த பூக்கள் உன் கூந்தலில்
சந்தோஷமாய் சொல்கின்றன..என்
உதடுகளுக்கு இடம் இல்லை என்று...
இரவில் என் உதடுகள் பழிக்கின்றன
பூக்களை...

இணைந்து நடக்கையில் என் கைகளுக்குள் பிண்ணி கொள்கிறாய்
உன் உடல் என் மேல் தீரமாய் உராய்கிறது
உன் இருப்பை, உன் உரிமையை பறைசாற்றுகின்றாய்
என் ஆண்மையை உன் புடவையின் நூல்களுக்குள் இழைத்து கொள்கிறாய்...கவனித்து கொள், நம்மை சுற்றி விதவைகளும் உண்டு.

நீ நலமின்றி இருக்கிறாய், உன்னுடன் நான் இருக்கிறேன்
நீ செல்லும் பாதையில் விளக்குகள் இல்லை, நான் வழிகாட்டுகிறேன்
உன் மதிப்புகளில் கொஞ்சம் குழப்பங்கள், நான் தெளிவுபடுத்துகிறேன்
சில மரணங்களின் போதும், மாதம் ஒரு முறை நீ சோர்ந்து படுக்கும்போதும்...நமக்குள் இருக்கும் பிணக்குகள் எல்லாம் மறைகின்றன..

என் வாழ்வின் எல்லா இயக்கங்களிலும்
உன்னை நீ இழைத்து கொள்கிறாய்
என் மதிப்புகளை உயர்த்துகிறாய்,
சிறு பிணக்குகள் கொள்கிறோம் சில நேரம், நமக்குள் பேசுகிறோம்
நம்மை நமக்குள் உயிர்பித்து கொள்கிறோம்
நாம் திரும்பி வருகையில் என் மேல் சாய்ந்து கொள்கிறாய்
நாகம் இருந்த இடம் வெற்றிடமாக உள்ளது.

மாலை நேர வெயிலும் சாரல் மழையும்
என் வீட்டுதாழ்வாரங்களில் வழிந்தோடுகின்றன...இரவு
கோடைகளில் தூக்கத்தை கொண்டு சென்றுவிடுகிறது..
நிலவு ஒற்றையில் நம் இருவரின் எண்ணங்களின் சாட்சியாக

கைதொலைபேசியில் காதலும் காமமும்
பகிர்ந்து கொள்கிறோம்
என்னோடு உன்னையும், உன்னோடு என்னையும்
மனதின் சர்ப்பம் மெல்ல பிணைந்து கொள்கிறது
உடல் நனைய துளிர்க்கிறோம்

திரையரங்கில் கதாநாயகியின் மேல் வருடும் என் பார்வைக்கு
உன் விரல்கள் கிள்ளி பரிசளிக்கின்றன,
விரல்கள் என் கண்களை மறைக்கின்றன
அவள் பற்றிய என் கருத்துகளை ஒப்பிட்டு ரசிக்கிறாய், உன்னுடன்
பின்னர் கொஞ்சமாய் ஊடல் கொள்கிறாய்,
நான் ரசிக்கிறேன்...
இரவு உணவில், முதுகு திருப்பி படுக்கையில்,
காலை காப்பியில் உன் ஊடல் தெரிகிறது
மீட்டும் வீணையில் தந்திகளின் பாரம் தெரியாதவனல்ல நான்
ஸ்வரங்களை சொல்லும் ராகங்களுக்கு பரிசுகள் உண்டு
உன் ஊடல்களை கொல்ல நான் கொஞ்சுகிறேன், நீ மிஞ்சுகிறாய்
கொஞ்சம் பொய்கள் சொல்கிறேன், பொய் என்று தெரிந்தும் உள்வாங்குகிறாய்
மெல்ல கரைகிறாய், என்னில் கரைகிறாய்
உன் வேகம் என்னை கொல்லும் வரைக்கும் வதைக்கிறாய்
வெற்றி உன் கண்களில் மிளிர்கிறது...
தொலைந்து இருந்த வெட்கம் மீண்டும்
குடிகொள்ளும் வரை நீ ஆட்சி செய்கிறாய்...மாதம் மும்மாரி பொழிகிறது

நான் தெளிந்த கவிஞன் இல்லை
கொஞ்சம் வசன கவிதைகளில் நம் காதலை சொல்கிறேன்
நீ தாளமும் ராகமுமாய் சொல்கிறாய்
இசை பிரவாகமாகிறது
நம்மை நனைக்கிறது...மழையில் நனையும்
கடவுள்களை பார்ததுண்டா நீ...

காமம் இல்லாத காதல் பற்றி பேசும்
சுத்த புருஷர்களை கவனிக்கின்றேன்
அவர்களின் முகமூடிகளுக்கு பின்னே
காமநாகத்தின் வால் அசைவது உனக்கும் தெரிகிறதா...

கவிதைகள் பேசுகிறோம், கால் ஓய நடக்கின்றோம்
திரைப்படங்கள் விமர்சிக்கபடுகின்றன, தெருமுனை தேநீர் கடைகளில் விருந்தினர்கள் ஆகிறோம்...இசை பற்றி
வாத்தியங்களை விட அதிகம் அதிர்கிறோம்...உலகம் எல்லாமும்
எனக்கும் உனக்கும் என உணர்கிறோம்...
நெடுநாளைய ஒரு பின்னிரவில் சொல்ல
மறந்த வார்த்தைகளை மட்டும்...மறைக்கிறோம்...
புத்தகங்களுக்குள் ஒளியும் மயிலிறகாக...