அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 26, 2006

இன்னும் என்னை எப்போதாவது...

உனக்கும் எனக்கும் என்ன உறவு...
நானும் நீயும் யார்...
நீ என்னில் நிறைந்திருக்கிறாய்... நான் உன்னிலும்
எதுவும் இல்லாமல் நீ...எல்லாமுமாய் நீ...
முதன்முறையாக நம்மை நாமாய் உணர்கிறோம்...

உன் செழுமைகளின் அழுத்தம் என் புறங்கைகளில்
என் விரல்கள் உன்மேல் படராமல் இருக்கின்றன...முதன் முறையாக
ஆண்மையின் உயிர்பை உணர்கிறேன்...
கண்களால் நம் நிலையை ஒருவருக்கொருவர் உணர்த்துகிறோம்...
நெருங்கி அமர்கிறாய்...மெல்ல எனக்குள் குழைந்து கொள்கிறாய்...

வாலை குழைத்து நிமிர்ந்து நிற்க்கும் காம நாகம்
மெல்ல மெல்ல தலையில் தட்ட
கொஞ்சமாய் புரண்டு படுக்கிறது...
அதன் மூச்சுக்காற்றின் வெப்பம்
கழுத்தோர வேர்வை பாம்புகளாய்...

என் கைகளுக்கு உன் விரல்களை புதைத்து கொள்கிறாய்
உன் உதடுகளின் துடிப்பை என் மார்ப்பில் உணர்கிறேன்
இதயங்களின் துடிப்பு மெல்ல தாளமாகி நம் வெளியை நிறைக்கிறது
உன் உதடுகளின் அரும்பிய வேர்வைதுளி என்னால் சுவைக்கபடுகிறது...

நீ அறியாத நானும், நான் அறியாத நீயும்
நம் அறிமுகம் ஒரு படலம் போல நம் நட்பின் மேல் நீர்த்து இருக்கிறது...
ஆழமான நீர் நிலையின் ரகசியங்கள் போல
இன்னும் சொல்லாத விஷயங்கள் ஆயிரம்..
அவற்றுள் நாம் பற்றிய நம் கருத்துகளும் உண்டு

உன் வார்த்தைகள் வெளிப்படும் கணங்களில் எல்லாம்
என் காத்திருப்பின் உச்சம் கண்களில் தெரிப்பதை மறைக்கிறேன்...
இந்த வார்த்தையும் நம் காதலை சொல்லவில்லை என்பது
தெரிந்தும் பொய்யாய் ஆமோதிக்கிறேன்...
காத்திருத்தலின் ஆழம் நீள்கிறது...

நாம் நடந்து சென்ற சாலைகளின் பூக்கள்
நம் வரவை இன்றும் எதிர்பார்கின்றன.
நான் உன் கழுத்தில் வரைந்த கோலங்களின் போது...
நீ சிலிர்த்த ஈரங்களில் வளர்ந்த பூக்கள் அவை...
உன் மடியில் நாம் உணர்ந்த மென்மையை
அவை பழித்து காட்டுகின்றன..

உன் காதலை சொல்லிவிட்டாய்...
ஆணின் திமிர் உடனே ஒத்து கொள்ள தவிர்க்கிறது...
என் கண்களின் அர்த்தம் தெரிந்தவள் நீ
என் பதில் முன்னமே தெரிந்தவள் நீ...
நீ சொல்வது சம்மதமல்ல... ஆமோதிப்பு...
என் பதிலை தவிர்க்கிறாய்... என்
கண்களில் வழியும் அர்த்ததை ரசிக்கிறாய்...
உனக்குள் இருக்கும் உயிர் மிருகம்
தன் கால்களை உதைத்து கொண்டு என்
கண்களுக்குள் பார்க்கிறது - நான் மெல்ல சிரிக்கிறேன்...
அது ஒரு கட்டவிழ்தலின் மொழி

உன் காதோர பூக்களிலும், சுருண்ட கேசத்திலும்
என் மனதை கட்டி வைத்துள்ளாய்...உன்
விரல்கள் பற்றி நடக்க
என் திமிர் அடக்கி வைக்க...
என்னை பழக்குகிறாய்...
உன் நோக்கம் அறிந்தோ...உன்னை அறிந்தோ...
உடன்படுகிறேன்... முழுமையாக..

இரவு பேருந்தின் அடுத்தடுத்த இருக்கைகளில்
நாம் சால்வைகளில் அமிழ்ந்து இருந்தோம்...
ரகசியமான தீண்டல்கள் நம்மை உயிர்பித்து கொண்டு இருந்தன...
உன் பித்து என்னிலும் என் பித்து உன்னிலும் இருந்த காலங்கள் அவை...
நம் முத்தங்களில் அடையாளங்களாக
உன் விரல்கள் என்னில் கொண்ட தீற்றல்கள்
நினைத்திருக்கவில்லை நாம்...
ஒரு மழைக்காலத்தின் பின்னிரவில் சொல்லிகொள்ளாமல் பிரிவோம் என்று...

வசந்தகால மரங்களின் பூக்கள் இன்னும் நம்
உணர்வுகளை பூக்கின்றன..
குளிர்கால காமம்
கடந்தும் வசந்தகாலம் பூக்கும் காதல் போல...
நம் போர்வைக்குள் விதைத்து கொள்கிறோம்
காதலையும் சேர்த்து

என் அனுமதியை கண்களால் எட்டி எறிந்துவிட்டு
என்மேல் படர்கிறாய், உன் வேகம் குழந்தையின் பிடிவாதம் போல
என் காதுகளுக்குள் உன் வார்த்தைகள் சுழல்கின்றன
அவை பெரும்பாலும் புரிவதில்லை...தேவையில்லை
உன் செயல்கள் புரியவைக்கின்றன...
மென்மை மட்டும் காதல் என்று
யார் சொன்னது...
உன் முரட்டுத்தனத்தில் உணர்கிறேன்...
பெண்ணுக்கும் மீசை முளைக்கும் என்று...

கண்ணுக்குள் சூரியன் நுழையும் ...
விழிக்கிறேன்...கைகள் உன்னை தேடுகின்றன...
நீ தென்படுகிறாய்...குளித்திருக்கிறாய்...
தண்ணீர் தெளித்த பூக்கள் உன் கூந்தலில்
சந்தோஷமாய் சொல்கின்றன..என்
உதடுகளுக்கு இடம் இல்லை என்று...
இரவில் என் உதடுகள் பழிக்கின்றன
பூக்களை...

இணைந்து நடக்கையில் என் கைகளுக்குள் பிண்ணி கொள்கிறாய்
உன் உடல் என் மேல் தீரமாய் உராய்கிறது
உன் இருப்பை, உன் உரிமையை பறைசாற்றுகின்றாய்
என் ஆண்மையை உன் புடவையின் நூல்களுக்குள் இழைத்து கொள்கிறாய்...கவனித்து கொள், நம்மை சுற்றி விதவைகளும் உண்டு.

நீ நலமின்றி இருக்கிறாய், உன்னுடன் நான் இருக்கிறேன்
நீ செல்லும் பாதையில் விளக்குகள் இல்லை, நான் வழிகாட்டுகிறேன்
உன் மதிப்புகளில் கொஞ்சம் குழப்பங்கள், நான் தெளிவுபடுத்துகிறேன்
சில மரணங்களின் போதும், மாதம் ஒரு முறை நீ சோர்ந்து படுக்கும்போதும்...நமக்குள் இருக்கும் பிணக்குகள் எல்லாம் மறைகின்றன..

என் வாழ்வின் எல்லா இயக்கங்களிலும்
உன்னை நீ இழைத்து கொள்கிறாய்
என் மதிப்புகளை உயர்த்துகிறாய்,
சிறு பிணக்குகள் கொள்கிறோம் சில நேரம், நமக்குள் பேசுகிறோம்
நம்மை நமக்குள் உயிர்பித்து கொள்கிறோம்
நாம் திரும்பி வருகையில் என் மேல் சாய்ந்து கொள்கிறாய்
நாகம் இருந்த இடம் வெற்றிடமாக உள்ளது.

மாலை நேர வெயிலும் சாரல் மழையும்
என் வீட்டுதாழ்வாரங்களில் வழிந்தோடுகின்றன...இரவு
கோடைகளில் தூக்கத்தை கொண்டு சென்றுவிடுகிறது..
நிலவு ஒற்றையில் நம் இருவரின் எண்ணங்களின் சாட்சியாக

கைதொலைபேசியில் காதலும் காமமும்
பகிர்ந்து கொள்கிறோம்
என்னோடு உன்னையும், உன்னோடு என்னையும்
மனதின் சர்ப்பம் மெல்ல பிணைந்து கொள்கிறது
உடல் நனைய துளிர்க்கிறோம்

திரையரங்கில் கதாநாயகியின் மேல் வருடும் என் பார்வைக்கு
உன் விரல்கள் கிள்ளி பரிசளிக்கின்றன,
விரல்கள் என் கண்களை மறைக்கின்றன
அவள் பற்றிய என் கருத்துகளை ஒப்பிட்டு ரசிக்கிறாய், உன்னுடன்
பின்னர் கொஞ்சமாய் ஊடல் கொள்கிறாய்,
நான் ரசிக்கிறேன்...
இரவு உணவில், முதுகு திருப்பி படுக்கையில்,
காலை காப்பியில் உன் ஊடல் தெரிகிறது
மீட்டும் வீணையில் தந்திகளின் பாரம் தெரியாதவனல்ல நான்
ஸ்வரங்களை சொல்லும் ராகங்களுக்கு பரிசுகள் உண்டு
உன் ஊடல்களை கொல்ல நான் கொஞ்சுகிறேன், நீ மிஞ்சுகிறாய்
கொஞ்சம் பொய்கள் சொல்கிறேன், பொய் என்று தெரிந்தும் உள்வாங்குகிறாய்
மெல்ல கரைகிறாய், என்னில் கரைகிறாய்
உன் வேகம் என்னை கொல்லும் வரைக்கும் வதைக்கிறாய்
வெற்றி உன் கண்களில் மிளிர்கிறது...
தொலைந்து இருந்த வெட்கம் மீண்டும்
குடிகொள்ளும் வரை நீ ஆட்சி செய்கிறாய்...மாதம் மும்மாரி பொழிகிறது

நான் தெளிந்த கவிஞன் இல்லை
கொஞ்சம் வசன கவிதைகளில் நம் காதலை சொல்கிறேன்
நீ தாளமும் ராகமுமாய் சொல்கிறாய்
இசை பிரவாகமாகிறது
நம்மை நனைக்கிறது...மழையில் நனையும்
கடவுள்களை பார்ததுண்டா நீ...

காமம் இல்லாத காதல் பற்றி பேசும்
சுத்த புருஷர்களை கவனிக்கின்றேன்
அவர்களின் முகமூடிகளுக்கு பின்னே
காமநாகத்தின் வால் அசைவது உனக்கும் தெரிகிறதா...

கவிதைகள் பேசுகிறோம், கால் ஓய நடக்கின்றோம்
திரைப்படங்கள் விமர்சிக்கபடுகின்றன, தெருமுனை தேநீர் கடைகளில் விருந்தினர்கள் ஆகிறோம்...இசை பற்றி
வாத்தியங்களை விட அதிகம் அதிர்கிறோம்...உலகம் எல்லாமும்
எனக்கும் உனக்கும் என உணர்கிறோம்...
நெடுநாளைய ஒரு பின்னிரவில் சொல்ல
மறந்த வார்த்தைகளை மட்டும்...மறைக்கிறோம்...
புத்தகங்களுக்குள் ஒளியும் மயிலிறகாக...

No comments: