அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, July 30, 2006

ஒரு பிரிவின் மிச்சங்கள்…

பிரிவின் மிச்சங்கள்
பெரும்பாலும் சுமைகளாகின்றன
அழிந்த கோலங்களின் நிறங்களில்…
எறும்புகள் நிறைந்திருக்கின்றன..
சில வண்ணத்துபூச்சிகளின் மரணத்தில்
எல்லா வண்ணங்களும் மறந்து போவதை போல…
நிலவும் நானும் ஒற்றைவானமும்
தனிந்திருந்ததை போலவே… நீயும் இருந்திருப்பாய்..
இரவின் தனித்திருந்த தருணங்களில்
ஸ்பரிசங்களின் மிச்சங்களை கொண்டு…
என்னில் புதைந்திருக்கும் நினைவுகளின் மிச்சங்களை
துடைத்து கொள்கிறேன்…
அவை விட்டு சென்ற தடங்களில் எல்லாம்
ஏதோ வகையில் உன் பெயர் சொல்லப்பட்டு இருக்கிறது…
காலி குடுவைகளில் இருந்த தண்ணீரின் நினைவுகளை போல..
நம் பிரிவின் மிச்சங்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன…
போர்வைகளின் உன் வாசத்தை சுமந்து கொண்டு…
என் காலங்கள் எல்லாம் விழித்து இருக்கிறன…
தனித்த புல்லாங்குழல் இசையில்…
மெல்லிய பனியில் மலர்ந்து நிற்கும் சில மலர்களை..
உனக்காக சேமிக்கின்றேன்…
நினைவுகளை போலவே…

சுய ரகசியங்கள்

சில ரகசியங்கள் இன்னும்
சொல்லபடாமல் இருக்கின்றன..
கறுத்த சுய ரகசியங்களாக
அவை புதைக்க படுகின்றன..

மனதில் ஆழத்தில் வெளிப்படும்
நிறக்கலவைகளாக
சிலரிடம் பகிர்ந்து கொள்ளபடுவதுண்டு
அவற்றின் நிறங்கள் மாறியுள்ளன
என்ற ரகசியம் மறுபடியும் புதைகிறது

நிறங்கள் இல்லாத
ரகசியங்கள் சில இரவுகளில்
வெளிப்படுகின்றன…
இரவுகளின் நிறங்களை சுமந்து கொண்டு

புகைபடிந்த தண்டாவாள செடிகளை போல
ரகசியங்கள் அவற்றின்
நிறங்களை மறந்து
மேலும் ஆழ புதைகின்றன…

பிரிதொருநாளின் இலையுதிர் காலத்தில்…

இன்னும் குளிரென சொல்வாய்
அது இலையுதிர் காலம் என தெரிந்தும்…
என் நெருக்கத்தில் நீயும்…உன் பார்வைகளின்
ஸ்பரிசங்களில் நானும் …
வசந்த காலம் தொடங்க இன்னும்
சில மாதங்கள் இருக்கின்றன…
குளிர்கால காற்றில் …மரங்கள் உதிர்த்த இலைகளை
மிதித்து நடந்து கொண்டு இருக்கின்றோம்…
மலர்தலுக்கு தயாராகும் பூக்களின் தோட்டங்களை
காற்று வருடி கொண்டு இருக்கின்றது…
என் விரல்களுக்குள் உன் விரல்களை நுழைத்து நீ நெருக்கி கொள்வதுண்டு.. பெரும்பாலும் நாம் நடக்கும் தருணங்களில்
தேநீர் கோப்பைகளின் ஓரங்களில் நம் இருவரது உதடுகளின்
தடமும் பதிந்து இருக்கின்றன…
மணிக்கணக்கில் பேசியும் தீராது போகின்றன
மவுனமான பார்வைகள்…
வார்த்தைகளை தேடி தேடி … பார்வைகளாலேயே
சொல்லி கொள்கிறோம்.
கோடையும் குளிரும் வசந்தமும்…
மற்ற கதைகளை கண்டு இருக்கின்றன…மற்றபடி
பொதுவில் எல்லா இலையுதிர் காலங்களும்…
இதுபோலவே கழிகின்றன…

அணில்கள் புணரும் காலம்…

நாம் பிணங்கியிருந்தோம்…
அது அணில்கள் புணரும் காலம்…
சிறிய கருத்து கூறுகளாக…
தொடங்கிய விவாதங்களின் நுனி வேர்
நம் மண்ணில் வெட்டுபடும் தருணங்களில்
மெல்ல உயிர் கசியும் இரவுகளின் கருணைகளை தாண்டி…
நாம் பிணங்கியிருந்த காலம் அது…
பின்னர் ஒரு முறை புன்னகைத்த நினைவு இருக்கிறது…
அதுவும் கனவு போலவே…
மவுனமாய் பிரிந்திருந்தோம்…
எல்லா நினைவுகளின் இறுதியுலும்
வெட்டுபட்ட நுனிவேர்களின் ஈரம் இருந்தது…
உணர்தலை நினைவுறுத்தும் சில புன்னகைகள்
தேவைபட்டு இருந்தன..
நம் இருவரின் வலைகளை கொஞ்சமாய் தளர்த்தி கொண்டோம்…
பின்னர் நாம் புணர்ந்திருந்திருந்தோம்
ஒரு பனி வேளையில்…
அதுவும் அணில்கள் புணரும் காலமாகவே இருந்தது…

சில பனிக்கால பயணங்கள்…

இந்த பயணம் முழுவதும் நீ
என்னுடன் இருந்தாய்
நாம் ரசித்த பாடல்களாய்,
நீ அணிந்திருந்த உடையாய்…

நாம் நெருங்கியிருந்த புல்வெளிகளை இன்றும் பார்த்தேன்...
அவை மேலும் பசுமையாக..
நம்மை போலவே இன்னும் துணைகளோடு…
அவர்களின் நினைவுகளுக்காக…

உன் நினைவுகளில் இருந்து அழிந்திருக்க முடியாது
நாம் நடந்து போன ஏரிக்கரையின் சாலைகள்
சில மலை பாறைகளில் நாம் இளைபாறி இருந்தோம்
நம் பெயர் பொறிந்த மரங்களை
இன்னும் பார்க்கிறேன்…

அடையாள குழப்பங்கள் தீரவில்லை…
எல்லா பூக்களும் ஒன்று போலவே…
சில பெயர் தெரியாத பூக்களுக்கு…
நான் வைத்ததெல்லாம் உன் பெயர் மட்டுமே…

இயற்கையின் பனி பொழிவில்…
இடம்வலமாய் அலையும் வெற்று சாலைகளில்..
நம் பெயர் கொண்ட வேதங்களோடு
காதல் கொண்டிருந்தோம்…

என் கவிதைகளின் வார்த்தைகளோடு
உன்னை ஒப்பிட்டு கொள்வாய்…
சில கவிதைகள் உன்னை சொல்லும்…
சில கவிதைகள் உன்னில் என்னை சொல்லும்…

என் ஓவியங்களின் நிறங்களில்
உன் நினைவுகளை பதித்து இருக்கிறேன்…
சில நிறமில்லாத இடங்களை நிறப்புகின்றன
உன் விரல்களின் ரேகைகள்…

மலை சரிவுகளில் புதைந்து கொண்டு இருக்கிறது
என் நினைவுகளை போலவே
வானமும் .. கொஞ்சம் சூரிய வெளிச்சமும்…

நகரம்…

எல்லாரும் ஓடுகிறார்கள்
பேருந்துகள் நிறம்பி வழிகின்றன
குழந்தைகளின்
கண்களின் வடியும் கண்ணீர் கோடுகளை
துடைக்க யார்க்கும் மனமில்லை

இளங்காலை காமத்தின் சுகம் தெரியாத
சம்சாரிகளின் சத்தத்தில்
கழிவறையின் கதவுகள் அறைந்து சாத்தபடும்
சத்தங்கள் புதைகின்றன

கண்களின் மின்னி கொண்டு இருக்கிறது
அச்சடிக்கபட்ட காகிதங்களின் எண்கள்
எச்சில் வடியும் சிலைகளாக
அகிம்சையும் சுதந்திரமும்…

வீதிகளில் நிறம்பி வழிகிறது
இயலாமையும் ஆற்றாமையும்…
நெருங்கி நிற்க்கும் எவர் கண்ணிலும் இல்லை
நெருக்கத்தின் உயிர்ப்பு…

சிதைந்த உறவுகளை புறங்கையால் துடைத்தபடி
வாகங்களில் விரையும் அடிமை சமுதாயம்
கிழிந்து போன வானத்தின் சில துளி மழையும்
மண்ணில் இறங்க – ரசிக்க ஆளில்லை.

நாய்கள் குரைத்து கொண்டிருக்கும் அகாலத்தில்
சிட்டு குருவிகளின் மரணம்…
யாரிடமும் புன்னகையை எதிர்பார்க்காத
பட்டாம்பூச்சிகளின் கல்லறைகளுக்கு அருகில்

மன நோயாளியின் அர்த்தமற்ற ஓலம் போல
மூளைக்குள் வெடிக்கும் நிற துணுக்குகள்..
கறையான்கள் அழிக்கும் நாகரீகத்தின் துணைவேர்கள்..
இயங்கி கொண்டு இருக்கிறது …நகரம்.

மனசு…

இன்று கொஞ்சம்
இதமாய் இருக்கிறது

நீ இருக்கும் திசையில்
இருந்து வீசும் தென்றல்…

கொஞ்சம் உன்
வாசத்தையும் கொண்டு…