அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, August 16, 2006

நினைவுகள் சேமிக்கும் மரங்கள்

வெயில் நிறைந்து கிடைக்கும்
வேப்ப மரங்களில் நிழல்களுக்கு வெளியே
பெறும்பாலான மதிய நேரங்கள்
கொஞ்சம் சோம்பலில்தான் கழிகின்றன

நாங்கள் ஏதாவது மனனம் செய்து கொண்டிருப்போம்
சிலர் வேப்பம்பழங்களை சேமித்து கொண்டு இருப்பார்கள்
மாசிலாமணி வாத்தியாரின் மெல்லிய குரட்டை சத்தம்
சாலையில் செல்லும் பேருந்தின் சத்தத்தில் கொஞ்சம் கலையும்

நிறைய நினைவுகளை அந்த வேப்பமரம் சேமித்து வைத்திருக்கலாம்
சில சிறுமிகள் பெண்களானது முதல்
சில நண்பர்கள் விலகி நின்ற வரை... எல்லாம் நினைவுகளாக
பெயர் மறந்து போன ஒரு வாத்தியாரின் மரணம் உட்பட

மரணங்கள் சூழ்ந்த நிலையில்

முதன் முறை என் மரணம் உன்னால்தான் நிகழ்ந்தது
அது ஒரு புறக்கணிப்பின் விளைவாக

நம்மை நாம் தொடர்ந்து இருக்க
காரணங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை - எனினும்
நம் மரணம் நம் வேட்கையாக இருந்தது

மரணங்கள் சூழ்ந்த நிலையில்
இறுதியாக நாம் பிரிந்து செல்ல தயாரானபோது
பகிர்ந்து கொண்ட முத்தங்களின் ஈரத்தில்
நம் மரணம் காத்திருந்தது

இருப்பினும் இன்னும் எல்லா திசையிலும்
மரணங்கள் காத்திருக்கின்றன
அவை சில நேரங்களில் காதலின் புறக்கணிப்புகளாக
உருவகம் செய்யபடுகின்றன - சில நேரங்களில்
பிரிவுகளின் சுவடுகளாக

சொல்லாமல் தொட்டு செல்லும்...

நாம் நட்போடுதான் இருந்தோம்
மஞ்சள் தடவபட்ட உன் அழைப்பிதழை பார்க்கும்வரைக்கும்

பின்னிரவு வரைக்கும் நாம் பேசி கொண்டிருந்த
உன் வீட்டு மாடியின் தனிமையில்
அர்த்தம் சொல்ல முடியாத மவுனங்களை
மட்டும் கொண்டு... மீண்டும் சந்தித்து கலைகிறோம்

என் படுக்கை அறையில் நீ தொலைத்திருந்த சில
கைகுட்டைகளையும், சில புத்தகங்களையும்
நானே வைத்து கொள்ள போகிறேன்...
என் புத்தகங்களும், ஒரு கம்பளிசட்டையும்
உன்னிடம் மறந்து இருப்பதை போல

நமக்குள் பேசிய எல்லா வார்த்தைகளின் மிச்சங்களையும்
என் கவிதை புத்தகங்கள் கொண்டிருக்கிறது
சொல்லாமல் விட்டு போன காதலையும் சேர்த்து
சில பக்கங்கள் வெறுமையாக இருக்கின்றன