அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, August 29, 2007

ஏனோ இன்னும் கண்களில்...

தினமும் தான் பேசி கொள்கிறோம்
எல்லாமும் தான் சரியாக இருக்கிறது
நம் புன்னகை முகங்களை
புகைப்படங்களாக பரிமாறி கொள்கிறோம்
தொலைபேசி பேச்சுகளாய்
காலத்தின் நிகழ்வுகளை பகிர்ந்து
கொள்ளும் நிமிடங்களும் உண்டு...
இணையமும் நம்மை விடாமல்
இணைத்து கொண்டுதான் இருக்கிறது...
இருந்தும் இன்னும் நினைவில் இருந்து
மறையாமல் உள்ள ஒரு பிம்பம்...
கடைசியாக நீ விடைபெற்ற போது
சின்னதாய் கண்ணீர் துளிர்த்த உன் முகம்...

Wednesday, July 11, 2007

மழைக்கு பிறகான ஒரு மதியத்தில்...

ஜன்னலுக்கு வெளியே மழையின் ஈரம்
ஒரு மவுனத்தை போல உறைந்து கிடக்கிறது
காலம் வழிந்து கொண்டு இருக்கிறது - இலைகளின் வழியாக
துளிர்த்தும் உதிர்ந்தும்..மழையின் மிச்சங்களாக

சொற்களின் பிம்பங்களை காட்டிய குமிழ்கள் உடைந்து
வெற்றிடங்கள் எங்கும் நிரம்புகின்றன - உறைந்த மவுனத்தில்
இருளும் வெளிச்சமும் கொண்ட அந்தரங்க நடைபாதையின்
சில வளைவுகளில் மிச்சமிருக்கிறது
சில பூக்களும் கொஞ்சம் மழைத்துளிகளும்

எதுவும் இறுதியில்லை எனினும் முத்தமிட தோன்றுகிறது
உன் வெம்மையில் தொலைந்து விட தோன்றுகிறது - எனினும்
மற்றுமொரு முறை கைகளை கோர்த்து மெல்ல பிரிகிறோம்.

மழை மீண்டும் வலுக்கும் என்ற நிலையோடு வானம்
விரிந்து கிடக்கிறது பல நிறங்களில்...
பறவைகள் மட்டுமே பயணிக்கின்றன வானம் முழுவதும்..

Monday, June 25, 2007

இன்னும் கொஞ்சம் தொலைவில்...

மிக நீண்ட தொலைவிலான என் பயணங்களின் எல்லைகளில்
முகமறியா திசையில் நீ காத்திருப்பதும் நினைவில் வரும்
சந்திப்பின் சாத்தியங்களை விட்டு விலகி எதிர்கோடுகளில்
பயணிக்கும் மழை மேகங்களை போல

வடிந்துவிட்ட மழை ஈரங்களை கொண்ட கடல் மணலின் வெளியில்
மழைக்கு பின்னான இருண்ட மேகங்களை கொண்டிருக்கும் கடல் போல
உள்ளிருக்கும் காதலோடு காலம் நீண்டு கொண்டிருக்கிறது
எனினும் இடைவெளிகள் தூர அளவை மட்டுமே கொண்டிருக்கின்றன.

Friday, February 16, 2007

தனிமையின் ஒரு அறை...

மவுனம் நிறைந்திருக்கிறது
திறந்திருக்கும் ஒற்றை சன்னலின்
வெளிச்சம் மவுனத்தை நிறைத்திருக்கிறது
புத்தங்கங்கள் கலைந்திருப்பதாலேயே
அவைகள் படிக்கபட்டவையாக கொள்கிறேன்
கொஞ்சம் இசை குறிப்புகள்
கொஞ்சம் ஓவிய கலவைகள்
எதுவும் பூர்த்தியாகவில்லை
கலைந்த படுக்கையின் அருகில் கடிகாரம்
காலம் என்ற துடிப்பை நினைவுறுத்தினாலும்
நான் இல்லாத என் அறையின் வெறுமையை
நீயும் உணர்ந்ததாகவே சொல்கிறாய்
பின்னிரவுகளின் தனிமையில்
என் அறையின் சுவர்களின் நீ பதித்த
ரேகைகள் உன் நினைவுகளை சொன்னாலும்
தனிமையாய் உணர்கிறேன் - நாம் இல்லாத நம் அறையை.

மழைக்காற்றின் இறுதியில்...

காலத்தின் எல்லையில் மூச்சு திணரும்
மெல்லிய ஓசைகள் - எனக்கும் கேட்கின்றன
உலர்ந்த இலைகளில் யாரும் நடக்காத
பாதைகள் - காலடிகளுக்காக காத்திருக்கின்றன
முன்பொரு மழை நாளில் ஈரகாற்றில்
அடர்ந்த மவுனத்தை என் சுவாசமாக கொண்டேன்
இன்று நிதானித்து கவனிக்கும்போது...
வெளியின் பிரக்ஜையின்றி தன் வழி செல்லும் நதி
காலத்தின் உள் ஆழம் போல இறுகி இருக்கின்றது...

Wednesday, January 24, 2007

நிகழ்வுகளின் இறந்தகாலங்கள்..

கவிதைகளால் புணரப்படும் சுவை அறியாத
உன்னுடனான என் தோழமை
என் கவிதை வரிகளை எரித்ததினாலேயே
உருவானது...
நமக்குள்ளான நிகழ்வுகள் பற்றிய என் குறிப்புகள்
எல்லாம் நம் தோட்டத்தில் புதைக்கபட்டன
எனினும் ரகசியமாக நான் எழுதிய குறிப்புகளின்
வார்த்தைகள் எல்லாம் உன்னாலேயே சிருஷ்டிக்கபட்டன...
நம் நிகழ்வுகளின் குறிப்புகளில் எல்லாம்
கவிதைக்கான வார்த்தைகள் கவனமாக தவிர்க்கபட்டிருந்தன...
வெளிச்சம் குறைவான மாலை நேர சந்திப்புகளின் இறுதியில்
நெடிய முத்தங்களுடன் பிரிவோம்..
நான் தனித்து நடக்கும் இரவுகளின் கவிதைக்கான வார்த்தைகள்
என்னுடன் இருந்திருந்தன...
ஒரு கோடையின் இறுதியில் வேட்கைகளின் நிஜத்தில் நாம்
திளைத்திருந்த மாலையில் நம் தோட்டத்தின் எல்லா குறிப்புகளும்
கவிதைகளாக மலர்ந்திருந்தன...
பிறகு நெடுநாட்கள் நாம் சந்திக்கவில்லை...
தனிமையில் சேர்ந்திருந்த வார்த்தைகளின் கனம் கூடி மழை பொழிவின் உச்சத்தில்
நம் குறிப்புகளின் இருந்து கவிதைகள் தம்மை தாமே உருவாக்கி கொண்டன
முடிவுறாத ஒரு கவிதையின் முதல் வரியை போல
ஒவ்வொரு கோடையின் இறுதியிலும் மழை பொழிகிறது...
மெல்லிய குளிர்காலத்தின்
வெளிச்சம் குறைவான அறைகளில்
முடங்கும் போது
புணர்வின் வேட்கை போல மெல்ல எழும்
தற்கொலைக்கான நினைவுகள்
அடர்ந்த இருட்டுக்குள் எனக்குள் நானோடு
பேசிக் கொண்டிருக்கும் நிமிடங்களின்
பேச்சுகள் பெறும்பாலும்
தற்கொலை பற்றியதாகவே அமைகின்றன...

வலி இல்லாத ஆழமான இருட்டு உலகத்தையே
தற்கொலைக்கு பின்னான உலகமாக கொண்டிருக்கிறேன்
ஏற்க்கபட்ட நிமிடங்களும் புறக்கணிப்பின் நிமிடங்களும்
ஒன்றாகவே தோற்றமளிக்கும் உலகம் அது
நிறங்களின் தன்மை அறியாத ஓவியத்தில் இருந்து
வழிந்தோடும் வண்ணங்கள் குருதியை நினைவுறுத்துகின்றன
எனக்குள் நான் அமிழ்ந்து போகும் வண்ணங்களில்லாத உலகத்தில்
புணர்வுக்கு பின்னான சுவாசம் போல வேட்கையுடன் காத்திருக்கும் மரணம்
என்னுடனான நானின் ஒவ்வொரு மரணத்தையும் ஒரு
தற்கொலையின் நிகழ்வாகவே கொள்ளும் ஒவ்வொருமுறையும்
வேறு வேறு நிறங்களுடன்...
நாம் இணைந்து எழுதிய கவிதைகளை உனக்கு நினைவுறுத்துகிறேன்
உன் வார்த்தைகளும் என் வார்த்தைகளும் அவற்றில் புணர்ந்திருந்தன
நாம் பகிர்ந்து கொண்ட உணர்வுகளின் வடிவமாகவே அது இருந்தது

புனைவுகளின் வெளியில் நாம் உருவாக்கிகொண்ட
அரூபமனிதர்களை பற்றிய சிறு குறிப்புகளை நாம்
மறந்திருக்க முடியாது என்பது என் கணிப்பு...

நாம் பிரிந்து நடக்கும் நொடியின் தீரம் தாங்காமல்
வேகமாய் நடக்கிறோம் - புனைவுகளின்
குறிப்புகளை மனதில் கொண்டபடி.

தொடக்கத்தின் சில நிலைகள்...

மரணம் பற்றிய குறிப்புகளை
நாம் திரட்ட தொடங்கியிருந்த
நிமிடங்களிலேயே
நிகழ தொடங்கியிருந்தது
நமக்குள்ளான மரணமும்...
அதனை காதலின்
தொடக்கமாகவும்
கொள்ளலாம்...

சில சொற்களின் கோடுகள்...

என் கவிதைகளின் வார்த்தைகளை இடம் மாற்றும்
சுதந்திரம் கொண்டவளாய் நீ இருந்தாய்
அப்படி இடம் மாற்றப்பட்ட கவிதைகள்
ஒவ்வொரு முறையும் அர்த்தங்களை புதியதாய் கொண்டன

என் அடையாளம் தவிர்த்த என் கவிதைகள்
நாளடைவில் என்னை விட்டு மெல்ல விலகின
அவற்றுக்கு உன் சுவை பிடித்திருந்ததை உணர்ந்தபோது
கொஞ்சம் வலி இருந்ததை நான் ஒத்து கொள்ளத்தான் வேண்டும்

வெகு நாட்கள் நான் கவிதைக்கான நிகழ்வுகளை தவிர்த்து வந்தேன்
எனினும் ஒரு தனிமையான பின்னிரவில் அது நிகழ்ந்து விட்டது
என் அறையின் சுவர்களில் கிழித்திருந்த கோட்டோவியங்களில்
நீயும் நீ மாற்றம் செய்த கவிதைகளின் சாயலும் தெரியவில்லை

வார்த்தைகளின் கோடுகளின் இயல்பான விதிப்படி
நிறங்களால் ஒன்றுபட்டு குமிழ்களோடு கரைகின்றன
என் மிச்சம் இருந்த நினைவுகளில்...
உன் கவிதைகளும் என் ஓவியங்களும்...

ஒரு மரணத்தின் பதிவு...

அடர்ந்த வனத்தின் தனிமையில்
ஒரு முனிவனை போல அவன் அமர்ந்திருந்தான்
நிசப்தம் ஒன்றே நிலையாக இருந்த நிலையில்
அவன் மரணம் மெல்ல நிகழ தொடங்கியது

ஓய்வு கொள்ளும் நினைவுகளின் முடிவில்
அவன் முன்னே இருந்தன அவளும் சில கேள்விகளும்
சிதைந்த நினைவுகளின் வழியே அவள் புன்னகை
அவனுள் நிறங்களாய் வழிந்தது

சூன்யத்தில் ஒலித்த அவன் கேள்விகளுக்கு
அவள் பதில் சொன்னாள் மவுனங்களாய்
எதிரொலித்த அவள் கேள்விகளுக்கு
அவன் கண்ணீரை பதிலளித்தான்

சித்தார்த்தனின் மரணம்
புத்தனால் நிகழ்ந்தது...