அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Friday, February 16, 2007

தனிமையின் ஒரு அறை...

மவுனம் நிறைந்திருக்கிறது
திறந்திருக்கும் ஒற்றை சன்னலின்
வெளிச்சம் மவுனத்தை நிறைத்திருக்கிறது
புத்தங்கங்கள் கலைந்திருப்பதாலேயே
அவைகள் படிக்கபட்டவையாக கொள்கிறேன்
கொஞ்சம் இசை குறிப்புகள்
கொஞ்சம் ஓவிய கலவைகள்
எதுவும் பூர்த்தியாகவில்லை
கலைந்த படுக்கையின் அருகில் கடிகாரம்
காலம் என்ற துடிப்பை நினைவுறுத்தினாலும்
நான் இல்லாத என் அறையின் வெறுமையை
நீயும் உணர்ந்ததாகவே சொல்கிறாய்
பின்னிரவுகளின் தனிமையில்
என் அறையின் சுவர்களின் நீ பதித்த
ரேகைகள் உன் நினைவுகளை சொன்னாலும்
தனிமையாய் உணர்கிறேன் - நாம் இல்லாத நம் அறையை.

3 comments:

arasubalraj said...

சில கவிதைகளை வாசித்து முடித்தவுடன், உடனடியாக விமர்சனம் தோன்றி விடுகிறது.பெரும்பாலும் அவை கருத்துச் சொல்வதைத் தாண்டி எதையும் செயவதில்லை. சில கவிதைகளை படித்தவுடன் ஒரு மெளனம் சூழ்ந்து கொள்கிறது. புரிதலின் மயக்கம், உண்டான உணர்ச்சியின் இனம் புரியா தன்மை...இரண்டும் சேர்ந்து அந்தக் கவிதை மனதில் தொடர்கிறது.பிறகு மீண்டும் அந்தக் கவிதை படிக்கப்பட நேர்ந்தால், சில இலைகள் விலகிப் பறக்கின்றன.இது ஒரு தொடர் நிகழ்வாகி, கவிதை இரசித்தல் ஒரு நிகழ்ச்சிப் போக்காகி விடுகிறது. முத்துக்குமாரின் கவிதைகள் இரண்டாம் பிரிவில் வருகின்றன என்றே கருதுகிறேன்.

முத்துக்குமாரின் கவிதைத்தளம் பல கூறுகளால் நிரம்பியிருக்கிறது. எறும்புகள், பூக்கள், மழை, நிறம், ஓவியம் என சில குறியீடுகள் பெரும்பாலும் அனைத்துக் கவிதைகளிலும் நிரம்பியிருக்கின்றன. பெரும்பாலான கவிதைகள் ஆண்-பெண் உறவின் நுணுக்கமான பரிமாணங்களை உள்ளடக்கியிருக்கின்றன.புரிதலின் மயக்கம் ஏறத்தாழ எல்லாக் கவிதைகளிலும் இருக்கிறது.ஒரு கவிதையில் அவரே சொல்லியிருப்பது போல்..

"யாருக்கு புரிய வேண்டும்
உனக்கும் எனக்கும் தவிர.."

ஆனால் ஒரு அழகிய முழுமையுறாத சித்திரம் எழும்புவதைத் தவிர்க்க முடியவில்லை. உதாரணமாக,

"முடிவுறாத ஒரு கவிதையின் முதல் வரியை போல
ஒவ்வொரு கோடையின் இறுதியிலும் மழை பொழிகிறது..."

இந்த வரிகளுக்கு எத்தனை பொருள்கள் உண்டு? மழையின் தொடர்ச்சி, கவிதையின் தொடர்ச்சி, உறவின் தொடர்ச்சி, கோடை எனும் உருவகத்தின் பின் சாத்தியப்படும் அர்த்தங்கள்....அழகான வரிகள் என்று மட்டும்தான் சொல்ல முடிகிறது.சில கவிதைகள் அந்தரங்கமான புரிதல்களோடு எழுதப்பட்டவையாகத் தோன்றுகின்றன.ஆண்-பெண் உறவுச் சிக்கலகளின் நுணுக்கமான விசாரணையை பல வரிகளில் காண முடிகிறது. "விளையாட்டு" கவிதையின் இறுதி வரிகள் பரஸ்பர புரிதல் எனச் சொல்லப்படுவதை கேள்விக்குள்ளாக்குகிறது.

"என் காகிதத்தில் உன் பெயரும்
உன் காகிதத்தில் என் பெயரும் தவிர..

நாம் எழுதியவற்றில் எல்லாம் ஒத்து போயின...
அதனால் என்ன...?"

இங்கே பெயர் என்பது என்ன?குறியீடுகள் கட்டவிழ்தலின் பரவசத்தை உணர முடிகிறது. ஆணாதிக்க சமூகத்தால் மிக அதிகமாக குழப்பப்பட்டு விட்ட காதலுக்கும், காமத்திற்க்குமான உறவை, பிரிவை, பின்னலை ஒரு அனுபவம் போல போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.

"காமம் கொள்ளாத காதல் கொண்டதாய்
நினைவில்லை..எனக்கு..
உன் செழுமைகளில் முகம் புதைத்து
ஓய்ந்திருந்த போது
காதலும் கொஞ்சம் துளிர்விட்டு இருக்கலாம்.."

"மெல்லிய இசையில் நிலவும் பூக்களும் கொண்ட
காதலின் வார்த்தைகள் மெல்ல கரைந்து
புன்சிரிப்புகளில் வழியும்
மலையோரத்தில் பூக்கும் பெயர்தெரியாத பூக்களின்
வாசம் போல - உணர்தலில் மேலோங்கும் காமமும் காதலும்..."

ஒரு வசந்த காலக் காற்று நம்மை தழுவிக் கொள்வதைப் போல சொற்களும், அர்த்தங்களும், படிமங்களும் நம்மை தழுவிச் செல்கின்றன. புணர்வின் பிறகான உணர்ச்சிகளை மிக அழகாய்ச் சொல்கிறது ஒரு கவிதை.

"உன் விரல்களை கொண்டு வரைந்த ஓவியங்கள்
என் உடல் முழுவதும் நிறைந்து இருக்கின்றன...
வண்ணங்களில் விளையாடிய குழந்தை போல
கலைந்து உறங்குகிறாய் நீ.."

படிமத்தை ஆழமான சொற்களில் விலக்கி, ஒரு மங்கலான ஒவியத்தை மனக்கண்ணில் எழுப்பும் வரிகளாய்,

"வலி இல்லாத ஆழமான இருட்டு உலகத்தையே
தற்கொலைக்கு பின்னான உலகமாக கொண்டிருக்கிறேன்
ஏற்க்கபட்ட நிமிடங்களும் புறக்கணிப்பின் நிமிடங்களும்
ஒன்றாகவே தோற்றமளிக்கும் உலகம் அது"

என விரியும் பொழுது ஒரு ஓவியம் சம்பவித்து விடுகிறது. ஒரு உறவின் தீர்மானகரமான இடைக்கட்டத்தில் எழும்பும் காதலின் தவிப்பை கீழ்க்காணும் வரிகளால், மொழிபெயர்த்தல் போல உணர்வுகளை மொழியாக்கியிருக்கிறார்.

"உன் வார்த்தைகள் வெளிப்படும் கணங்களில் எல்லாம்
என் காத்திருப்பின் உச்சம் கண்களில் தெரிப்பதை மறைக்கிறேன்...
இந்த வார்த்தையும் நம் காதலை சொல்லவில்லை என்பது
தெரிந்தும் பொய்யாய் ஆமோதிக்கிறேன்...
காத்திருத்தலின் ஆழம் நீள்கிறது..."

"துணை", "உயிர்ப்பு" ஆகிய கவிதைகள் சிறியன மட்டுமின்றி, இவரது நடையிலிருந்து மாறுபட்டு மிகச் சாதாரணமாக ஒலிக்கின்றன. "நகரம்" ஒற்றை இலையாய் மாறுபட்ட உள்ளடக்கத்தோடு பேச முயல்கிறது.

அதிக எண்ணிக்கையில் அவர் எழுதாமலிருப்பது சந்தர்ப்பவசமானதல்ல. கவிதைகளைச் செய்ய முடியாது, எழுத மாத்திரமே முடியும் என்பதன் உதாரணமாகவே கருதுகிறேன். ஆயினும், பெரும்பாலும் மாறுபடாத உள்ளடக்கங்கள் ஒரு அயர்ச்சி ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. மாறுபட்ட களங்களோடும், வாழ்க்கைக் கண்ணோட்டங்களோடும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் அவரது கவிதை உலகம் மென்மேலும் விரிந்தால், நமக்கு மேலும் சில நல்ல கவிதைகள் கிடைக்கக் கூடும்.

Anu said...

Dear Muthu,

Your poems always make the other person to think. This also does the same.. It reminds lot of things to lot of people. As it did to me... Please write continuously it will kill your lonliness. When u r writing you will start feeling your words warmthness around you... Take care

Keep writing and stay in touch...

ஸ்ரீ said...

good :-))))