அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, February 13, 2008

மவுனத்தை பற்றிய இசைக்குறிப்புகள்...

மவுனத்தை பற்றிய இசைக்குறிப்புகளை எழுதுவோம்
என ஒரு முறை தீர்மானித்தோம்
ஒலிக்குறிப்புகளை பற்றி நீ தகவல் தருவதாக சொன்னாய்

பறவைகளின் சிறகசைக்காத ஒலியும்,
மாலை வெயில் தெருவில் விழும் ஒலியும் திரட்டி கொடுத்தாய்
ஜுவாலைகளுக்குள்ளும், நீரோடைகளின் ஆழத்திலும்
நான் கொஞ்சம் திரட்டினேன்

இசைக்காத கருவிகளின் ஒலிக்குறிப்புகளை பற்றிய
கருத்து வேறுபாடு நம்மில் எழுந்த போது
இருவருமே அக்குறிப்புகளை நிராகரித்தோம்

புணர்வுக்கு பின்னான மரணத்தை ஒத்த ஒலிக்குறிப்புகளை
ரகசியமாக திரட்டி கொண்டோம்.

பழைய வீட்டின் யாரும் உபயோகப்படுத்தாத கண்ணாடிகள்
சில ஒலிக்குறிப்புகளை நமக்கு வழங்கியது

மலர்வதற்க்கு முன்னான பூக்களும், தீட்டப்படாது மறந்த வர்ணங்களும்
கொடுத்ததை தவிர - திரட்ட ஏதும் இல்லாத இறுதி வினாடிகளில்
நாம் பரிமாறி கொண்ட மவுனங்கள்
இதுவரை நாம் சேமித்ததை விட ஒலிமிகுந்ததாய் இருந்ததன

கால குதிரைகள்...

இயல்பின் வெளி எங்கும் மூச்சிரைத்தபடி திமிறி நிற்க்கிறது
இயல்பின் கனம் நழுவிய கால குதிரைகள்

குறியீடுகள் இல்லாத காலம்
குதிரைகளின் பிடறி முழுவதும் விரவி நிற்க்கிறது

கண்மூடி சபித்தபடி என்னில் இருந்து வெளியேறுகிறாய் - சதைகள் கிழித்தபடி
வெளி எனும் மாயையில் என் குருதி கலக்கும் வினாடிகளில்

தரை உதைத்தபடி ஓட துவங்குகின்றன கால குதிரைகள்...

பறவைகள் விற்பவனும் நானும்...

மரணத்தின் நிழல்கள் படர்ந்த ஒரு நீல இரவில்
பறவைகள் விற்பவனுடனான என் சந்திப்பு மறுபடி நிகழ்ந்தது
கூண்டுகள் திறந்து கிடந்தன - சிறகுகள் மட்டுமே சிதறி கிடந்த பாதையில்
எதுவும் பேசாத மவுனம் மட்டும் நழுவி கிடந்தது.

தான் விற்க்கும் எல்லா பறவைகளின் மொழியும் அவன் அறிந்ததாகவே சொல்லியிருந்தான்
மொழி இல்லாததை மொழியில் உரையாடும் ஒரு விளையாட்டு அது
வெயில் நீண்ட பகல்களிலும், வெட்கை மிகுந்த இரவுகளிலும்
அந்த மொழி தன்னை தானே பேசி கொள்வதுண்டு

ஒவ்வொரு பறவையின் இறகசைக்கும் சப்தமும் அவனுக்கு தெரியும்
வாழ்வின் சில உறைந்த நிமிடங்களை போல அவை அவனுக்குள் பதிந்து இருக்கின்றன
பறவைகளுடன் அவனும் வானத்தின் எல்லா நிறங்களையும் அறிந்து வைத்துள்ளான்
அந்த நிறங்கள் அவன் காதலையும், காமத்தையும், தனிமையையும் கொண்டுள்ளன
ஆழ்ந்த வண்ணங்கள் அவன் ரகசியங்களையும், மெல்லிய வண்ணங்கள்
அவன் நிதானமின்மையையும் சொல்கின்றன

நான் ஒருபோதும் பார்த்திராத வாத்தியத்தை அவன் வாசிக்கிறான்
அதன் இசையில் உலகத்தின் எல்லா பறவைகளும் அவன் கூடுகளில் வந்தடைகின்றன

ஒவ்வொருமுறை நாங்கள் சந்திக்கும்போதும் - மலைமுகட்டின் தென்கோடியில் அமர்ந்தபடி
கூண்டுகளை ஒவ்வொன்றாக திறந்துவிட்டு கொண்டுதான் இருக்கிறோம்

பறவைகளின் தடங்களை வானம் எப்போதும் கொண்டிருப்பதில்லை
அவை கொண்டவை எல்லாம் பறவைகளின் நிறங்களையே..