அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Friday, November 13, 2009

ஊழியின் ஒற்றை விதி…

 

P1000197

பெரு மழை ஒன்று பெய்து ஓய்ந்ததை போல
இருக்கின்றது இந்த அமைதி

தனிமையின் சிறகுகளில் ஈரம் உதிர்த்து ஜன்னல் வழியே நிற்கிறேன்

கோடை இறுதியின் மழையை ஒத்து இருந்த தருணத்தின் மிச்சங்கள்
தோட்டமெங்கும் நிறைந்து கிடந்தன

கோப்பையின் சூடான தேனீரும்
ஒலிக்கும் மெல்லிய குரலிசையும் தவிர
அறையில் யாருமில்லை என்பதை போல
கலைந்து கிடக்கின்றன

போர்வைகளும் காகிதங்களும் இசையும் கொஞ்சம் காலமும்...

நாள்காட்டியில் தொங்கும் நேற்றைய பொழுதுகளும் - எழுதி முடிக்கபடாத ஒரு கவிதையும் மட்டுமே
வாழ்ந்து இருந்த காலங்களை சொல்லின

இரவில் மறுபடியும் மழை தொடங்கியதாக -
பின்னொரு முறை நீ சொன்னாய்

அந்த மழை ஒரு பேரூழி கால நிசப்தத்தை முடித்து வைத்ததாக  -
ஒரு கதை சொல்லி
என் மரணத்துக்கு பின்னால் சொல்லி கொண்டிருந்தான்.

நிகழ்வுகளை தொகுத்து பார்க்கையில் - 

அன்று பெருமழைக்காலத்தின் ஒற்றை விதியென
விரிந்திருக்கும் ஆகாயத்தின் ஓரங்கள்

மறுபடியும்  பூக்க தொடங்கியதென சில குறிப்புகள் சொல்கின்றன..

Thursday, November 12, 2009

பறவைகள் வாழ்ந்த வனமும் வானமும்...

 

P1030745

ஒரு காலத்தில் இது பறவைகள் வாழ்ந்த காடாக இருந்தது -
பின்னர் ஒரு யுக முடிவின் வெள்ளத்தில் காகிதங்கள் நிறம்பி - எரியும் பாலைவனமாக ஆனது

இன்றும் எரிந்து கொண்டிருக்கும் காகிதங்களில் சில நேரம் - நீங்கள் அறிந்திறாத பறவைகளின் கூச்சல்களை கேட்கலாம்

அவை கடவுள்கள் புணரும் சத்தத்தை ஒத்துள்ளதாக சில காகிதங்களில் எழுதியுள்ளது…

இந்த காட்டின் மறுபுறத்தில் ஒரு வற்றாத நீர் நிலை இருந்தது -இப்போதும் இருக்கிறது சில நீல நிற காகிதங்களுடன்

எரிந்த காகிதங்களின் புகை மங்கும் ஒரு முன்னிரவில் - காட்டின் நிறங்கள் எல்லா காகிதங்களிலும் பரவ தொடங்கின

வெகு தூரத்தில் மேகக்கூட்டங்களுக்கு அப்பால் -

காகிதங்களில் வாழும் கட்டமைப்பு கொண்ட ஒரு பறவை இனம் பயணத்தை தொடங்கியிருக்கின்றது

வனம் காத்திருக்கிறது மீண்டும் பறவைகளின் எச்சங்களுக்காக...

Friday, March 27, 2009

மேலும் சில கவிதைகள்...

இந்த சில கவிதைகள் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியவை. அப்போதெல்லாம் அலுவலக மின் - அஞ்சல் குழுமத்தில் புகைபடங்கள் பதித்து ஆர்வமுள்ளவர்கள் கவிதைகள் எழுதுவோம். ஒரே புகைபடத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் வரும். அப்படி நான் எழுதிய சில கவிதைகள் இங்கே. அதே புகைப்படங்கள் கிடைக்காததால் - அதே பொருள் வரும் வேறு புகைப்படங்கள் பதிக்கிறேன்.
என் அறையில் எப்போதும் மஞ்சள் இலைகள் குவிந்திருக்கும்
அவற்றை நான் பல இடங்களில் இருந்து சேகரித்து இருப்பேன்

எல்லா இலைகளும் சில கதைகளை கொண்டு இருந்தன
அவற்றில் சில வாழ்ந்த கால கதைகள், சில உதிர்ந்த கால கதைகள்

வசந்த காலத்தின் இறுதியில் உதிர்ந்த இலைகள்
பருவ காலங்களின் ரகசியங்கள் அறிந்தவை...

சேகரித்த இலைகள் தங்களுக்குள் பேசுக்கொள்ளும்
வாழ்வு பற்றியும் வீழ்வு பற்றியும்

தோட்டத்தில் விழுந்து கிடக்கும் சில இலைகள்
மரணித்த சில மனிதர்களை நினைவுறுத்துவதுண்டு...

என் அறையில் உள்ள இலைகளைப்போலவே
எனக்கும் தெரியும் வாழ்தலும் பிரிதலும் பற்றி...கைகொள்ளாத பறவை கூண்டுகளோடு நடமாடும்
பறவைகள் விற்பவனை சூழ்ந்து கொள்கின்றன குழந்தைகள்

இறகுகள் விரிப்பதின் சூட்சுமம் மறந்த பறவைகள்
குழந்தைகளை வேடிக்கை பார்க்கின்றன

யுகங்களாய் சுமக்கும் மவுனங்களுடன்
பறவைகள் விற்பவன் கைகளை நீட்டுகிறான்

கூண்டுகளுக்கு வெளியே நடக்கும் பறவைகள்
விரல்களில் வந்தமர்கின்றன

பறவைகளின் மொழியிலான அவன் உரையாடல் குழந்தைகளுக்கு புரியும்...

உன்னால் தவிர்க்கபட்ட என் பார்வைகளும் புன்னகைகளும்
மவுனமாய் காத்திருந்தன
என்னை நீ கடக்கும்போது உண்டாகும்
வசந்த காலத்துக்காக

நான் காதலால் மறுக்கபட்ட அந்த யுகத்தில்
நீயும் என்னோடு இருந்தாய்...
நாம் நிராகரித்த காதலின் ரணத்தோடு.நாம் இறுதி முறையாக சந்தித்தது அப்போதுதான்
இது இலையுதிர் காலமாக இருந்தது
நம் முடிவுகளை நாம் மறுபடியும் உறுதிபடுத்தி கொண்ட
காலங்களையும் இலையுதிர் காலமெனவே கொள்வேன்
உன் நினைவுகள் படரும் காலங்களை எல்லாம்
வசந்தமென கொள்வதை போலவே...வெகு நாட்களுக்கு முன்பே தொலைத்திருக்கின்றோம்..
சில குதூகலங்களையும் அவற்றின் நினைவுகளையும் கூட..

தார்சாலைகளின் மேலான ஓட்டத்தின் விளைவாக புல்தரை தேடும் பாதங்கள்
பட்டாம்பூச்சி பருவத்தின் நிறங்களை தொலைத்த பார்வைகள்...

வார்த்தைகளுக்கு இடையிலான மவுனங்கள் நிஜங்களை சொல்கின்றன
மறுபடியும் தொடங்கும் பயணங்கள்... சில மறந்து போன நினைவுகளோடு...